லெபு புடு (Lebuh Pudu) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது, பதிவு செய்யப்படாத மருந்துகளை விற்பனை செய்து வந்த மற்றும் இருப்பு வைத்திருந்த நான்கு இடங்களை சுகாதார அமைச்சு மூடியுள்ளது.
அவற்றில் இரண்டு இடங்கள் சட்டவிரோத மருத்துவமனைகளாகவும் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுவதாக கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சுகாதாரத் துறையின் மருந்தக அமலாக்கப் பிரிவுத் தலைவர் ஷஃபில்லிசா சம்சுரி கூறியதாக ‘பெர்னாமா’ செய்தி வெளியிட்டுள்ளது.
துணிக்கடை மற்றும் பயண முகமை நடத்துவது போன்ற போர்வையில் வெளிநாட்டினரால் இந்த இடங்கள் நடத்தப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
“இந்த மருத்துவமனைகள் வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டவை. சோதனையின் போது அங்கு யாரும் இல்லை என்றாலும், இவை வெளிநாட்டு மருத்துவர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
“நோயாளிகள் மருந்துகளைப் பெறுவதற்கு முன், இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரை அளவைச் சரிபார்ப்பதற்காக அந்த இடத்தின் பின்புற அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின் போது, இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரை பரிசோதனை உபகரணங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் அனுமதி பெறாத மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த இடங்களை வாடகைக்கு எடுத்து நடத்தியவர்கள் மற்றும் சட்டவிரோத மருத்துவமனைகளில் மருத்துவர்களாகச் செயல்பட்டதாக நம்பப்படும் நபர்களை அடையாளம் காண அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்




