போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அந்தோனி லோக் விடுத்திருக்கும் முன்மொழிவு குறித்து முடிவெடுப்பதற்கு முன், டிஏபி (DAP) பொதுச்செயலாளரான அவரைச் சந்தித்து அவரது கருத்துகளைக் கேட்கவிருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
லோக் இத்தகவலைத் தன்னிடம் நேரில் தெரிவித்ததாகக் கூறிய அன்வார், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதை தான் புரிந்துகொள்வதாகவும் குறிப்பிட்டார்.
“அவர் என்னிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார்; ஆனால், அவருடன் இது பற்றி விவாதிக்க எனக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் அவரது கருத்துகளைக் கேட்க வேண்டும். அதேவேளையில், கொள்கை பிடிப்புள்ள ஒரு மனிதராக அவர் ஏன் இத்தகைய முடிவை எடுத்தார் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஊழல் விவகாரங்களில் நாங்கள் பலவீனமாகவோ அல்லது மென்மை யான போக்கைக் கொண்டிருப்பதாகவோ தோற்றமளிக்கும் எதையும் ஆரம்பத்திலிருந்தே அவர் உறுதியாக எதிர்த்து வந்துள்ளார்.
“குறிப்பாக, சிறிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் உட்படப் பலரின் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், அவரது இந்த நிலைப்பாடு முக்கியமானது. எனவே, அவரைச் சந்தித்து அவரது கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே ஒரு முடிவை எடுக்க முடியும்,” என்று சிலாங்கூர் சர்வதேச வர்த்தக மையத்தில் (SITC) நடைபெற்ற ‘பெரிந்திஸ் ரிஃபோர்மிஸ்’ (Perintis Reformis) மறுசந்திப்பு தேநீர் விருந்து நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
நஜீப் விவகாரத்தில் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்பட்டது தொடர்பாக டிஏபி கட்சியின் நிலைப் பாட்டிற்கு இணங்க, போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக லோக் நேற்று அறிவித்திருந்தார்.
அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதம் விரைவில் அன்வாரிடம் சமர்ப்பிக்கப் படும் என்றும் அவர் கூறினார். இந்தச் சந்திப்பு எப்போது நடைபெறும் என்று கேட்கப்பட்டபோது, சீனாவிலுள்ள ஷாங்காய் நகருக்குத் தாங்கள் இருவரும் மேற்கொள்ளவிருக்கும் பயணங்களை முடித்துத் திரும்பிய பிறகு இச்சந்திப்பு நடைபெறக்கூடும் என்று அன்வார் தெரிவித்தார்.




