சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பள்ளிகள் வியாழக்கிழமை (அக்டோபர் 22) முதல் மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கும்.
சிலாங்கூர் கல்வித் துறை புதன்கிழமை (அக்டோபர் 21) வெளியிட்ட அறிவிப்பில், வெளிப்புறச் செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப் படுவதாகவும் தெரிவித்துள்ளது.
பள்ளி நிர்வாகத்தினர், சுற்றுச்சூழல் துறையின் (DOE) காற்று மாசு குறியீடு (API) அளவீடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்; மேலும், உடல்நல அபாயம் அதிகம் உள்ள மாணவர்களின் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
“தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், பள்ளியிடம் முறையான தகவல் தெரிவித்துவிட்டு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கலாம்” என்று அந்தத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், துல்லியமான மற்றும் தற்போதைய தகவல்களைப் பெறுவதற்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்புத் தளங்களை அல்லது பள்ளிகளை மட்டுமே அணுகுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.




