கோலாலம்பூர்:
மலேசிய இந்தியக் கலைத்துறையின் வளர்ச்சிக்கும், சமூகத்திற்கும் நீண்டகாலமாகப் பங்களித்து வரும் மூத்தக் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில், மலேசிய இந்தியக் கலைஞர் நற்பணி இயக்கம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
கலைத்துறையில் பல ஆண்டுகளாக தங்களது திறமையையும் உழைப்பையும் அர்ப்பணித்து, மலேசிய இந்தியக் கலைத்துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மூத்த கலைஞர்களை நேரில் சந்தித்து இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
கலைஞர்களின் பங்களிப்பை நினைவுகூர்வதுடன், அவர்களுடன் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
மூத்தக் கலைஞர்கள் கலைச்செல்வன், நாராயணன், ஏகவல்லி, டிஎம்எஸ் ராஜா, கே.எஸ். மணியம், பரஞ்சோதி, ராதா சக்குபாய், சாரங்கபாணி, குழல் கேசவன் ஆகியோருக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் பாடகி ஷர்மிளா சிவகுருவிற்கு மருத்துவ நிதி உதவியும் வழங்கப்பட்டது.
தங்களது இளமைக்காலம் முதல் கலைத்துறையில் தொடர்ந்து பணியாற்றி, பல தலைமுறை கலைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் முன்னோடிகளாகவும் விளங்கிய மூத்த கலைஞர்களுக்கு இந்த தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
“கலைஞர்களின் பங்களிப்பை மதிப்பதும், அவர்களின் நலனில் அக்கறை கொள்வதும் நமது சமூகப் பொறுப்பு. மூத்த கலைஞர்கள் நமது கலைத்துறையின் வரலாற்றையும் அனுபவத்தையும் சுமந்து நிற்கும் முக்கியமான ஆளுமைகள். அவர்களுடன் தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்,” என இயக்கத்தின் தலைவர் சுகன் பஞ்சா தெரிவித்தார்.
மூத்த கலைஞர்களின் கலைப்பணியையும் அர்ப்பணிப்பையும் பாராட்டும் இந்த மனிதநேயப் பணியானது, மலேசிய இந்தியக் கலைத்துறையில் கலைஞர்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
தீபாவளி திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த கலைஞர்களுடன் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்டதுடன், அவர்களின் நீண்டகால கலைப்பணிக்கு நன்றியும் மரியாதையும் தெரிவிக்கப்பட்டது.
மூத்த கலைஞர்களை மதிப்போம்…
அவர்களின் கலைப்பணியைப் போற்றுவோம்…
கலைஞர்களின் நலனில் தொடர்ந்து கைகோர்ப்போம்!
மலேசிய இந்தியக் கலைஞர் நற்பணி இயக்கம் (MIEWA)




