பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைவர், உதவி ஆணையர் ஷம்சுதீன் மமாட் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவும் வகையில், சந்தேக நபர் நவம்பர் 4-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்குக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
30 வயது மதிக்கத்தக்க அந்தச் சந்தேக நபர் மீது, 1959/63-ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
“அமிலத் தாக்குதலால் தீக்காயங்களுக்குள்ளான பாதிக்கப்பட்ட பெண், தற்போது சீரான உடல்நிலை யுடன் உள்ளார்” என்று அவர் இன்று வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை பெட்டாலிங் ஜெயா PJS 4 பகுதியில், வெளிநாட்டவர் ஒருவரான பெண் மீது அமிலத் திரவம் வீசப்பட்டதில் அவர் தீக்காயங்களுக்குள்ளானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணுக்கும், அவரது காதலனுக்கும் இடையே இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று ஷம்சுதீன் மமாட் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.




