தமிழ் இலக்கியத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக புனைவு, அபுனைவு நூல்களை எழுதி வந்தவர் எழுத்தாளர் இரா. முருகன் (74). நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என பல வகை எழுத்திலும் தொடர்சியாக பங்களிப்பைச் செய்தவர்.
1850 – 1960 காலகட்டங்களில் தமிழகத் திலும் கேரளத்திலும் வேர்விட்டுப் பரவிய ஒரு குடும்பத்தின் புனைவு கலந்த நான்கு நாவல்களாக அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே படைப்புகள் வெளியாகின. இதில், அரசூர் வம்சம் மற்றும் விஸ்வரூபம் பெரிய அளவில் கவனம் பெற்றன. இவர் எழுதிய மிளகு நாவல் பரவலான வாசிப்பைப் பெற்ற வரலாற்று நாவலாகும்.
தினமணியில் தியூப்ளே வீதி என்கிற பெயரில் தன் வரலாற்றையும் எழுதி வரவேற்பைப் பெற்றார். உன்னைப் போல் , பில்லா – 2 ஆகிய திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். 10க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், ஏராளமான கட்டுரைகளை எழுதிய இரா. முருகன் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.




