முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது உட்பட, மீண்டும் கட்சிக்குத் திரும்ப விரும்பும் எந்தவொரு முன்னாள் உறுப்பினரின் விண்ணப்பங்களையும் பரிசீலிக்க அம்னோ தயாராக இருப்பதாக உச்ச செயற்குழு (MKT) உறுப்பினர் அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
கட்சியில் மீண்டும் இணைய யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களின் விண்ணப்பங்கள் ஒரு சிறப்புக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு, பின்னர் MKT கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அமாட் விளக்கினார்.
“அம்னோவின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்,” அவர் கூறினார். மேலும், மீண்டும் கட்சிக்குத் திரும்ப வாய்ப்புள்ள முன்னாள் தலைவர்களின் பெயர்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.அவரின் கூற்றுப்படி, கட்சியை மீண்டும் வலுப்படுத்த அம்னோ ‘மன்னித்து மறந்துவிடும்’ அணுகு முறையைக் கையாளுகிறது.
மகாதீர் இரண்டு முறை அம்னோவிலி ருந்து விலகினார்; முதல் முறை 2008-ல் அப்துல்லா அமாட் படாவி தலைமை யிலானபோதும், பின்னர் 2016-ல் நஜிப் ரசாக் தலைமையிலான போதும் விலகினார்.
2023-ல் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீன் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் துணைத் தலைவர் ஹிஷாம்முதீன் ஹுசைன் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அம்னோ நேற்று அறிவித்தது.




