கடந்த வாரம் ஈப்போவின் சன்வே சிட்டியில் உள்ள ஒரு கோயில் பலிபீடத்தை அவமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் இன்று ஒரு அறிக்கையில் இந்தத் தண்டனையை உறுதிப்படுத்தினார்.
ஒரு மதத்தை அவமதிக்கும் நோக்கத்து டன் வழிபாட்டுத் தலத்தை வேண்டு மென்றே சேதப்படுத்தியதற்காக, அந்த நபர் மீது நேற்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டதாக அவர் கூறினார்.
மார்ச் 12 அன்று காலை, தனது கடைக்கு முன்னால் இருந்த கோயில் பலிபீடம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டறிந்த உள்ளூர்வாசி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது இந்த வழக்கு தொடங்கியது.”மூடிய சுற்று தொலைக்காட்சி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ததில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முந்தைய இரவு அந்தக் கோயிலை சேதப்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது,” என்று நூர் ஹிசாம் கூறினார்.
இந்தத் தகவலின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் தனியாகச் செயல்பட்டதாக நம்பப்படும் உள்ளூர் சந்தேக நபரை காவல்துறை கைது செய்தது.இந்த வழக்கு குறித்து யூகங்கள் செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்திய நூர் ஹிசாம், மத உணர்வுகளையும் மற்றவர்களின் சொத்துக்களையும் மதிக்க வேண்டும் என சமூகத்தினரையும் கேட்டுக் கொண்டார்




