ஹரி ராயா ஐடில் ஃபிட்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த விரைவுத் திட்டத்தின் மூலம், குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் உட்பட சுமார் 4,000 பேர் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப் படுவர் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
மக்களின் சுமைகளைக் குறைப்பதற் கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த திவால் நிவாரண முயற்சி என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். மடானி அரசாங்கம், திவால் நிலைத் துறை மூலம், ‘விரைவு வழி’ திவால்நிலை முன்னெடுப்பைச் செயல்படுத்தும்.
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்து உருவாக்கிய செழிப்பின் பலன்களை மக்கள் தொடர்ந்து அனுபவிப்பதை உறுதி செய்வதில், அரசாங்கத்தின் மையக் கொள்கைகளாக விளங்கும் கருணை மற்றும் மனிதாபிமான விழுமியங்களின் வெளிப்பாடே இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஆகும்,” என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
அதே நேரத்தில், நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் முழுவதும் மக்கள் தொடர்ந்து சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்ற தனது அறிவுரையையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
“இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ள உலகப் பொருளாதாரத்தில், எதிர்கால நிச்சயமற்ற நிலைகளுக்குத் தயாராகும் வகையில் அனைத்துத் தரப்பினரும் தங்கள் நிதிகளை ஒழுக்கமான முறையில் நிர்வகிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.




