புத்தாக்க விருதுகளில், தொடக்கப் பள்ளிப் பொறியியல் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் நான்கு மலேசிய மாணவர்கள் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.
இந்தச் சாதனையைத் தேசியப் பெருமைக்குரிய விஷயமாகக் கருதிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், புத்தாக்கம் மற்றும் கல்விசார் சாதனைகள் மூலம் சிறந்து விளங்கும் இளம் மலேசியர்களின் திறனை எடுத்துரைத்தார்.
“இந்தச் சாதனை பெருமைக்குரியது மட்டுமல்ல, நமது இளைய தலைமுறை யினர் அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்படக்கூடிய, ஆக்கப் பூர்வமான மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய யோசனைகளைக் கொண்டுள்ளனர் என்பதையும் இது நிரூபிக்கிறது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
அந்த மாணவர்கள், சாரங்கபாணி தமிழ் தேசியப் பள்ளியைச் (SJKT) சேர்ந்த இளனேயன் யுவராஜன் மற்றும் எம். தீர்த்தண்ணா, மற்றும் சுல்தான் பட்லிஷா தேசிய இடைநிலைப் பள்ளியைச் (SJKT) சேர்ந்த இளனருண் யுவராஜன் மற்றும் எம். இளமாறன் என அடையாளம் காணப்பட்டனர்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள டத்தோ ரமணன், மாணவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களின் பெற்றோர்கள் பாங்காக்கிற்குப் பயணம் செய்திருந்ததைக் குறிப்பிட்டு, அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்காகப் பாராட்டு தெரிவித்தார்.




