கோலாலம்பூர், வாங்சா மஜுவில் உள்ள ஒரு மசாஜ் மையத்தில் இரண்டு நபர்கள் லஞ்சம் கேட்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதிகாரி கள் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
எட்டு நிமிடங்களுக்கும் மேலாக ஓடும் அந்தக் காணொளியில், கூட்டாட்சிப் பிரதேச குடியிருப்பாளர்கள் பிரதிநிதிகள் சபையின் (MPPWP) உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்ளும் அந்த நபர்கள், அந்த மையம் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி அளிப்பதற்காக அதன் உரிமையாளரிடம் பணம் கேட்பது தெரிவதாகக் கூறப்படுகிறது. சிசிடிவி மூலம் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் அந்தக் காணொளியில் உள்ள நேரக்குறி, அது செவ்வாய்க் கிழமை (மார்ச் 24) அன்று பதிவு செய்யப்பட்டதைக் குறிக்கிறது.
பிரதமரின் துறையின் (கூட்டரசு பிரதேசம் அமைச்சர் ஹன்னா யோ, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். MPPWP உறுப்பினர்கள் எந்தவித சமரசமும் இன்றிப் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது: பாதுகாப்புப் பணத் திட்டங்களுக்கோ அல்லது இடைத்தரகர்களைப் பயன்படுத்துவதற்கோ சற்றும் சகிப்புத்தன்மை இல்லை,” என்று அவர் கூறினார்.




