தெற்கு நோக்கிச் செல்லும் 155.8 கிலோமீட்டர் பகுதியில்,அக்குடும்பம் பயணித்த பலநோக்கு வாகனம் (MPV) வடக்கு-தெற்கு விரைவுச்சாலை யிலிருந்து விலகி சாலையோரத் தடுப்பில் மோதியதில், 46 வயதான ஆண் உயிரிழந்தார் மற்றும் அவரது எட்டு வயது மகள் பலத்த காயமடைந்தனர்.
மூன்று பேர் கொண்ட குடும்பம் ஜொகூர் பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, மாலை சுமார் 5 மணியளவில் இந்த கோரமான விபத்து நிகழ்ந்தது.
உயிரிழந்தவரான சுஃபாத் ஐனி, தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன், சம்பவ இடத்திலேயே மருத்துவ ஊழியர்களால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
டாங்காக் மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் ரோஸ்லான் முகமது தாலிப் கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் 41 வயதான மனைவி அந்த பலநோக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும், அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், அது நெடுஞ்சாலையின் இடதுபுறத்தில் இருந்த தடுப்பில் மோதியதாகவும் தெரிவித்தார். “இந்த மோதலின் தாக்கத்தால், முன் இருக்கையில் பயணித்த கணவர் படுகாயமடைந்தார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவக் குழுவினர் உறுதிப் படுத்தினர்,” என்று அவர் கூறினார்.
வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்த தம்பதியரின் மகளுக்கு முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன. அவர் அவசர சிகிச்சைக்காக முவாரில் உள்ள சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனைக்கு (HPSF) கொண்டு செல்லப்பட்டார்.
“விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இது 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்று கண்காணிப்பாளர் ரோஸ்லான் மேலும் கூறினார்.
“இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவுவதற்காக, விசாரணை அதிகாரி ஆய்வாளர் நூர்ஹிஸ்யாம் ஷாஃபிக் மாட் லோபாவை 013-9825324 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”




