நாடு தழுவிய நிலையில் அறப்பணிகளை மேற்கொண்டு வரும் அறம் செய்வோம் இயக்கம் 11ஆம் ஆண்டில் பயணத்தைத் தொடர்கிறது. பதிவுபெற்ற இயக்கமாக இதன், நான்காம் ஆண்டுப்பொதுக்கூட்டம் அண்மையில் காஜாங் பேசில் லீவ்ஸ் உணவகத்தில் நடைபெற்றது. புறநகர் மேம்பாட்டு அமைச்சின் மேனாள் துணை அமைச்சர் டான்ஸ்ரீ குமரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தமதுரையில், அறம் செய்வோம் இயக்கம் மேற்கொண்டு வரும் அறப்பணிகளைப் பாராட்டியதோடு இது போன்ற இயக்கங்கள் நாடு முழுவதும் செயல்பட்டால் நிதிச்சுமையை எதிர்நோக்கும் இந்தியர்களுக்குப் பேருதவியாக அமையும் என்று குறிப்பிட்டார்.
நமக்கு நாமே உதவிக் கொள்ளும் இது போன்ற முயற்சிகள் காலத்தின் கட்டாயம். கூட்டுறவு முறையில் நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் தமிழ்க்கல்வி, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என எல்லாத் துறைகளிலும் மேலும் பின் தங்கி விடாமல் சாதனை படைக்க முடியும், தலை நிமிர்ந்த சமுதாயமாக வெற்றி பெற முடியும் என்று மேலும் குறிப்பிட்டார்.
உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்தால் இன்னும் பலருக்கு உதவிக்கரம் நீட்ட முடியும். நான்கு நூல்கள் வெளியீட்டின் மூலம் நிதி திரட்டும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. அறப்பணியில் இணைய விரும்பும் நண்பர்கள் அறம் செய்வோம் இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம்




