மலேசிய ஊடக மன்றம் (எம்எம்சி), தனது புகார்களைப் பெறும் வழிமுறையின் இரண்டாம் கட்டத்தை இப்போது முதல் செப்டம்பர் 30 வரை செயல்படுத்தியுள்ளது. அதன்படி, அனைத்துப் புகார்களும் அதிகாரப்பூர்வ படிவத்தின் மூலமாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இரண்டாம் கட்டத்தின் கீழ், மின்னஞ்சல் வழியாகச் சமர்ப்பிக்கப்படும் புகார்களை இனி ஏற்றுக்கொள்ளாது என்று எம்எம்சி தெரிவித்துள்ளது. அனைத்துப் புகார்களும் மிகவும் முறையான, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய வகையில் பதிவு செய்யப்பட்டு, மதிப்பிடப்பட்டு, செயலாக்கப்படுவதை உறுதி செய்வதே இந்த மாற்றத்தின் நோக்கமாகும்.
“முதல் கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இடைக்கால அணுகுமுறையையும் எம்எம்சி (MMC) தக்க வைத்துக் கொள்ளும். ஒரு புகார்தாரர் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்திடம் நேரடியாகப் புகாரை அளிக்காத பட்சத்தில், செயலகம் அந்தப் புகாரை உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பி வைப்பதன் மூலம் ஒரு வசதி செய்து கொடுக்கும் அமைப்பாகச் செயல்படும்.
“மேற்கொண்டு தலையிடுவதற்கு முன்பு, ஊடக நிறுவனத்தின் மட்டத்திலேயே தீர்வு தொடங்க வேண்டும் என்ற கொள்கைக்கு இந்த அணுகுமுறை இணக்கமாக உள்ளது,” என்று அது புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது. பகார்களைச் சமர்ப்பிக்கும் முன், எம்எம்சியின் நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் மதிப்பாய்வு செய்யுமாறும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஜனவரி 22 முதல் மார்ச் 31 வரையிலான முதல் கட்டத்தின் போது, செய்தி வெளியீட்டின் துல்லியம், படங்களின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு, சமூக நல்லிணக்கத்திற்கான உள்ளடக்கத்தின் தாக்கங்கள் மற்றும் செய்தி வெளியீட்டில் உள்ள நெறிமுறைக் கருத்தாய்வுகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக எம்எம்சி ஐந்து புகார்களைப் பெற்றது.
“அனைத்துப் புகார்களும் அந்தக் காலகட்டத்திற்குள் தீர்க்கப்பட்டன. ஆரம்பகட்டப் பரிசோதனை நிலையில் 100% தீர்வு விகிதம் எட்டப்பட்டது. இது வடிகட்டும் செயல்பாட்டின் செயல் திறனையும் தகுதி அளவுகோல்களின் தெளிவையும் பிரதிபலிக்கிறது,” என்று அது கூறியது




