சிலாங்கூர், சிப்பாங்கில் உள்ள கையுறை உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று ஏப்ரல் 15தேதி அன்று மூடப்பட்டதைத் தொடர்ந்து, 304 மலேசியர்கள் உட்பட மொத்தம் 1,426 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
WRP ஆசியா பசிபிக் Sdn Bhd நிறுவனம் மூடப்பட்டது தொடர்பான ஊதியம் மற்றும் பணிநீக்கப் பலன்கள் குறித்த அனைத்துக் கோரிக்கைகளும் உரிய செயல்முறைகள் மூலம் கையாளப்படும் என்று அமைச்சு கூறியது.
மார்ச் மாதத்திற்கான சம்பளப் பணம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும் அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சில மலேசியத் தொழிலாளர்களுக்கு ஆவண மேலாண்மை, நிதி விவகாரங்கள் மற்றும் இயந்திரப் பராமரிப்பு போன்ற முக்கியப் பணிகளைக் கையாள தற்காலிக ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று அமைச்சு கூறியது.
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர் களுக்கு, சாத்தியமான முதலாளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி புதிய வேலை களைப் பெறவும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு (பெர்கெசோ) உதவி வருகிறது.




