டெக்னாலஜி பார்க் மலேசியா கல்லூரி எஸ்.டி.என். . மீது முப்பத்தாறு முன்னாள் மாணவர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர். பயோமெடிக்கல் படிப்பை முடித்த பிறகு, மலேசியத் தகுதி முகமையிடமிருந்து (MQA) முழுமையான அங்கீகாரம் பெறாத பட்டயங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீதிபதி அர்சியா அபண்டி முன்னிலை யில் ஏப்ரல் 20 முதல் 23 வரை நடைபெற்ற இந்த வழக்கில், 13 சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி 11 அன்று வழக்கு மீண்டும் தொடங்கும் போது மேலும் 23 பேர் சாட்சியம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
தங்கள் மனுவில், டெக்னாலஜி பார்க் மலேசியா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் கல்லூரியின் உயிரி மருத்துவ அறிவியல் பட்டயப் படிப்பில் சேர்ந்ததாகவும், ஆனால் அதற்கு இன்னும் முழுமையான MQA அங்கீகாரம் இல்லை என்பது தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
படிப்பு நடந்துகொண்டிருந்தபோதுதான் இதுபற்றித் தங்களுக்குத் தெரிய வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் பாடத்திட்டம் புதியது என்பதால், முதல் தொகுதி மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு முழு அங்கீகாரம் பெறப்படும் என்று கல்லூரி தங்களுக்குத் தெரிவித்ததாக மாணவர்கள் கூறினர்.
இருப்பினும், 2014-ஆம் ஆண்டில் முதல் தொகுதி மாணவர்களுக்கு முழுமையான MQA அங்கீகாரம் இல்லாத பட்டயங்கள் வழங்கப்பட்டபோதுதான் பிரச்சினை வெளிப்பட்டது என்று அவர்கள் கூறினர்.
மாணவர்களின் கூற்றுப்படி, இதனால் அவர்களில் பலரால் தங்கள் பட்டப் படிப்பைத் தொடர அந்தப் பட்டயத்தைப் பயன்படுத்த முடியவில்லை.
மேலும், கல்லூரி முழு அங்கீகாரம் பெறும் பணியில் இருப்பதாகவும், அதற்கு மூன்று மாதங்கள் தேவைப்படும் என்றும் மார்ச் 24, 2014 அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டதாக அவர்கள் கூறினர்.
இருப்பினும், தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால், கல்லூரியின் விண்ணப்பத்தை MQA நிராகரித்து விட்டதை 2015-ஆம் ஆண்டில் தாங்கள் கண்டறிந்ததாக அவர்கள் கூறினர்.
இரண்டாவது தொகுதி மாணவர் களிடமும், கல்லூரி முழு அங்கீகாரம் பெற முயற்சிப்பதாகக் கூறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களில் சிலருக்குப் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை என்றும், மற்றவர்களுக்குப் பட்டயங்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
படிப்புக் கட்டணத்தைச் செலுத்த PTPTN கடன்களைப் பெற்றதாகவும், ஆனால் பட்டயப் படிப்புக்கு முழு அங்கீகாரம் இல்லாததால் வேலை தேடுவதில் சிரமப்படுவதாகவும் மாணவர்கள் கூறினர். கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் தாங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.




