ஓட்டுநரின் செயலால் பீதியடைந்ததாகக் கூறப்படும் ஒரு பெண், ஓடிக்கொண் டிருந்த இ-ஹெய்லிங் வாகனத்திலிருந்து குதித்துள்ளார். இந்தச் சம்பவம் தாமன் எங் ஆன் அருகே நிகழ்ந்தது, பின்னர் இது சமூக ஊடகங் களில் பரவலாகப் பகிரப்பட்டது. 25 வயதான அந்தப் பெண், வாகனம் ஓடிக்கொண்டிருந்தபோதே அதன் பின்பக்கக் கதவைத் திறந்து வெளியே குதித்ததைத் தொடர்ந்து, 47 வயதான அந்த ஓட்டுநர் காலை சுமார் 9 மணி யளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கிள்ளான் வடக்கு மாவட்டக் காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் எஸ். விஜய ராவ், இந்தச் சம்பவம் குறித்த விவரங்களை அளித்தார். ஓட்டுநர் இரண்டு பயணிகளை இறக்கிவிடச் சென்றுகொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார். “அந்தப் பெண்ணின் செயல்களைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக வாகனத்தை நிறுத்தி, அந்தப் பெண்ணுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.
பின்பக்கக் கண்ணாடியில் ஓட்டுநர் தன்னைக் கவனிப்பதை உணர்ந்த பிறகு, அந்தப் பெண் பீதியடைந்து தனது பாதுகாப்பு குறித்து கவலையடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது,”என விஜய ராவ் கூறினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஓட்டுநர் பயணத்தை ரத்து செய்துவிட்டு, அந்தப் பெண்ணை மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
“அந்தப் புகாரைத் தொடர்ந்து, உயிருக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ ஆபத்தை விளைவிக்கும் செயல்களைக் கையாளும் தண்டனைச் சட்டத்தின் 336-வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையை நிறைவு செய்வதற்காக, சம்பந்தப்பட்ட பெண்ணைக் கண்டுபிடிக்கும் பணியில் நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம்,” என்று விஜய ராவ் மேலும் கூறினார்.




