நாடு முழுவதும் மோசடி அழைப்பு மையங்களை நடத்தி வந்த கும்பல் களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை களில் 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் கம் டத்தோ ருஸ்டி முகமது இசா தெரிவித்துள்ளார்.
ஜனவரி 26 முதல் ஏப்ரல் 19 வரை இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதாகவும், இதன் விளைவாக 2,251 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“கைது செய்யப்பட்டவர்களில், ‘ஓப்ஸ் தாரிங்’ பிரிவில் 430 பேரும், அதைத் தொடர்ந்து ‘ஓப்ஸ் பெலாட்டுக்’ பிரிவில் 403 பேரும், ‘ஆப்ஸ் ஃபிரான்டியர்’ பிரிவில் 1,372 பேரும் அடங்குவர்,” என்று அவர் கூறினார்.
‘ஓப்ஸ் தாரிங்’ பிரிவைப் பொறுத்தவரை, அந்தக் கும்பல் பல்வேறு இனங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களை இலக்காகக் கொண்டு ஒரு மோசடி அழைப்பு மையத்தை நடத்தி வந்ததாக ருஸ்டி கூறினார்.
“இந்த நடவடிக்கையின் வெற்றியின் அடிப்படையில் நாங்கள் 74 விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளோம்,” என்று கூறிய அவர், கைது செய்யப்பட்ட 430 பேரில் 270 பேர் வெளிநாட்டினர் என்றும் குறிப்பிட்டார்.
அவர்கள் சீனா (198), இந்தோனேசியா (38), தைவான் (ஏழு), வியட்நாம் மற்றும் நைஜீரியா (தலா ஆறு), ஜப்பான் (ஐந்து), பங்களாதேஷ் (நான்கு), தாய்லாந்து மற்றும் மங்கோலியா (தலா இரண்டு), மற்றும் இந்தியா மற்றும் கம்போடியா (தலா ஒருவர்) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.




