கெலானா ஜெயா வழித்தடத்தில் இலகு ரயில் போக்குவரத்து (LRT) பயணிகளின் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது. மத்திய கிழக்கு மோதல் தொடங்கி யதிலிருந்து இந்த அதிகரிப்பு காணப்படுவதாக அதனை இயக்கும் ரேபிட் ரெயில் எஸ்.டி.என். பி.எச்.டி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரேபிட் ரெயில் LRT-யின் தலைமை இயக்க அதிகாரி நார் அஸ்மி முகமது யூசோஃப் கூறுகையில், ஏப்ரல் மாதத்தில் வார நாட்களில் பயணித்தவர்களின் சராசரி எண்ணிக்கை ஒரு நாளைக்கு 289,282 ஆகும். இது 2020-ஆம் ஆண்டில் 150,889 ஆக இருந்தது. இது கடந்த ஆறு ஆண்டு களில் 109 சதவீதம் அதிகரித்துள்ளது.
“இந்த புள்ளிவிவரங்கள் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 11.5 சதவீத வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகின்றன. இந்த வளர்ச்சிப் போக்கு வரும் ஆண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கெலானா ஜெயா வழித்தடத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த விளக்கக் கூட்டத்தின் போது அவர் கூறினார்.
ஈரான்-அமெரிக்க மோதல், எரிபொருள் விலை உயர்வு மற்றும் மானிய எரிபொருள் ஒதுக்கீடுகளில் ஏற்பட்ட குறைப்பு ஆகியவற்றின் போது இந்த அதிகரிப்பு காணப்பட்டதாக நார் அஸ்மி தெரிவித்தார்.
இருப்பினும், அரசாங்கம் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடவடிக்கைகளை அறிவித்தபோது, அதில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டது.
“ஒட்டுமொத்தமாக, பல பயனர்கள் தனியார் வாகனங்களிலிருந்து பொதுப் போக்குவரத்திற்கு மாறுவதை நாங்கள் கண்டு வருகிறோம், இது ஒரு நேர்மறையான முன்னேற்றம்,” என்று அவர் கூறினார்




