சுங்கை பட்டாணியில் உள்ள டத்தாரான் ஜாம் பெசார் அருகே ஒரு கண்காட்சித் தளத்தில் நடந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இருவர் இன்று நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். கோலா மூடா காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹன்யான் ராம்லான், 38 மற்றும் 18 வயதுடைய அந்த இரு ஆண்களும், இந்தச் சம்பவத்துடனும், கண்காட்சித் தளத்தில் குழந்தைகளின் பலூன்கள் விற்பனையுடனும் தொடர்பு டையவர்கள் என்று நம்பப்படுவதாகக் கூறினார்.
தேசிய நாளிதழான சினார் ஹரியான் அவரைத் தொடர்பு கொண்டபோது, ”அவர்கள் இரசாயனங்களைக் கலந்து கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார். முதல் சந்தேக நபர் நான்கு நாட்களுக்கும், இரண்டாவது நபர் ஒரு நாளுக்கும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு ள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக, இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304A-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில், எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.
குளிர்பான விற்பனையாளரான 42 வயது அஸ்மி அகமது, தனது வலது கை மற்றும் மார்பின் வலது பக்கத்தில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந் தார். 15, 36 மற்றும் 49 வயதுடைய மேலும் மூன்று ஆண்கள், தங்களது உடலின் பல்வேறு பாகங்களில் காயமடைந்தனர். கண்காட்சி நடைபெறும் இடத்தில் விற்பனை செய்வதற்காக, குழந்தைகளின் பலூன்களில் எரிவாயு சிலிண்டர் நிரப்பப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது




