ஆந்திராவை பூர்வீகமாக கொண்டு கர்நாடகாவில் வளர்ந்த சத்யேந்திரா, ‘ஏழாவது மனிதன்’, ‘மண்வாசனை’, ‘சத்யா’, ‘ஜெயில்’ உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எடிட்டர் பி.லெனின் இயக்கிய ‘Knock Out’ குறும்படத்திற்காகத் தேசிய விருதும் பெற்றுள்ளார்.
ஹாலிவுட், ஜெர்மன், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்த மூத்த நடிகர் சத்யேந்திரா (65) உடல்நலக் குறைவால் இன்று (மே 28) காலமானார்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட சத்யேந்திரா, கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை சுதந்திர இந்தியாவின் முதல் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆவார்.
வசதியான குடும்பத்தில் பிறந்த இவருக்கு 8 உடன்பிறப்புகள் உள்ளனர். 14 வயதில் தந்தை இறந்ததால் குடும்பம் வறுமைக்குத் தள்ளப்பட்டது.
புகழ்பெற்ற கன்னட நாடக இயக்குநர் பி.வி.காரந்தின் தொடர்பால் நாடகங்களில் நடிக்க துவங்கினார். பின், தேசிய விருது பெற்ற ‘நாகபர்ணா’ என்ற கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 7 மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப் படங்களிலும், 150-க்கும் மேற்பட்ட குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
15 குறும்படங்களை இயக்கி உள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் எனப் பன்முகத்திறன் கொண்ட இவர், கன்னட இலக்கியம் மற்றும் தத்துவத்தில் 2 முதுகலை (MA) பட்டங்களைப் பெற்றவர். ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்ச் ஆகிய மொழிகளைக் கற்று, மாணவர்களின் வீடுகளுக்கே சென்று மொழி ஆசிரியராகவும் பாடம் எடுத்து வந்துள்ளார்.




