கோலாலம்பூர், 15/12/2025 : மலேசிய சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தின் (சுற்றுலா மலேசியா) தலைவராக டத்தோ மனோகரன் பெரியசாமி டிசம்பர் 8 முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் வியாழக்கிழமை (டிசம்பர் 11) ஓர் அறிக்கையில் அறிவித்தார்.
டத்தோ டாக்டர் யாஸ்மின் மஹ்மூட்டுக்குப் பதிலாக, 1992 ஆம் ஆண்டு மலேசிய சுற்றுலா மேம்பாட்டு வாரியச் சட்டத்தின் பிரிவு 5(1)(a) இன் படி மனோகரன் நியமனம் செய்யப்பட்டதாக தியோங் கூறினார்.
“மலேசியா வருகை 2026 (visit malaysia 2026) பிரச்சாரத்திற்கு முன்னதாக சுற்றுலா ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி வலுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
பொது சேவை மற்றும் சுற்றுலாத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மனோகரன், முன்பு சுற்றுலா மலேசியா இயக்குநர் ஜெனரலாக பணியாற்றினார். அனைத்துலக ஊக்குவிப்புப் பிரிவின் (ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா) மூத்த இயக்குநர் உட்பட பல முக்கிய பதவிகளையும் வகித்தார்.




