தொழிலதிபர் ஆல்பர்ட் தெய் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) முன்னாள் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாகி இன்று புக்கிட் அமான் காவல் தலைமையகத்திற்கு வந்திருந்தார்.
காலை சுமார் 9 மணியளவில் அங்கு வந்தடைந்ததாகவும், புலனாய்வாளர்களுக்குத் தனது முழு ஒத்துழைப்பையும் அளித்ததாகவும் அஸாம் கூறியதாக சினார் ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“வாக்குமூலம் பதிவு செய்யும் செயல்முறைக்கு சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. அப்போது, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித் தேன்,” என்று இன்று அவரைத் தொடர்புகொண்டபோது கூறினார்.
தெய் கூறிய அனைத்து குற்றச்சாட்டு களையும் தாம் மறுப்பதாக அஸாம் தெரிவித்தார்.
மேலும், அந்தத் தொழிலதிபரைத் தாம் ஒருபோதும் சந்தித்ததில்லை என்றும், அவருடன் எந்தவிதமான கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொண்டதில்லை என்றும் அவர் காவல்துறைக்குத் தெரிவித்தார்.எனது சார்பாக எந்தவொரு தரப்பினரையும் சந்திக்க நான் எந்த வழக்கறிஞரையும் அனுப்பியதில்லை.
நான் ஆல்பர்ட்டை ஒருபோதும் சந்தித்ததில்லை அல்லது அவருடன் நேரடியாகப் பழகியதில்லை என்பதைக் காட்டும் ஆதாரங்களை விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பித்தேன்,” என்று அவர் கூறினார்.
தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெய் கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அஸாம் அழைக்கப்படுவார் என்று காவல்துறை சமீபத்தில் கூறியது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம் குமார், தெய் மே 13 அன்று இந்தப் புகாரைப் பதிவு செய்ததாகக் கூறினார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக அறிவுறுத்தல் கள் மற்றும் ஆலோசனைகளுக்காக விசாரணை ஆவணங்கள் விரைவில் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.




