மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு (எம்ஐபிபி) பரிசான் நேஷனலில் கூட்டணி சேர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதை மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் புனிதன் உறுதிசெய்துள்ளார். இருப்பினும் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரத்தையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று புனிதன் தெரிவித்தார். சரியான நேரத்தில் கட்சியின் முடிவு குறித்து பரிசான் நேஷனலிடம் தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
“எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அது மத்தியக் குழுவில் பேசி முடிக்கப்பட்ட பிறகுதான் அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியும். இப்போது ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பணி குறித்து மலேசிய இந்திய மக்கள் கட்சி சிந்தித்து வருகிறது,” என்று புனிதன் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.




