இந்திய விண்வெளி விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் தனது வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான நாள் என்று விவரிக்கும் ஒரு நாளில், அடர் சிவப்பு மற்றும் நீல நிறம் கொண்ட பட்டுப்புடவை அணிந்து அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
தற்போது அந்தப் புடவை வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத் தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் செவ்வாய் சுற்றுப்பாதை திட்டமான ‘மங்கள்யான்’ திட்டத்தின் செயல்பாட்டு துணை இயக்குநராக இருந்த நந்தினி, இந்த ஆடையை 2013 டிசம்பர் முதல் நாளன்று அணிந்திருந்தார்.
நந்தினிக்கு புடவைகள் மிகவும் பிடித்தமான ஆடை, அதிலும் குறிப்பாக அவரது தந்தை அவருக்குப் பரிசளித்த புடவைகளை பணியிடத்தில் முக்கியமான நாட்களின் போதோ அல்லது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போதோ அணிவது அவருக்கு மிகவும் பிடித்தமானது.




