கடந்த மாதம் ஒரு ஓட்டுநர் பயிற்றுவிப்பாளர் காயமடையக் காரணமான கலவரம் தொடர்பான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு பெண் உட்பட ஏழு நபர்களுக்கு, தும்பட்டில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தலா RM2,000 அபராதம் விதித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களான — அஸ்லி மமாத், 48; முகமது அஸாகி மமாத், 42; முகமது காத்ரி கனி, 52; அஹ்மத் ஃபைசல் ஜுஹாரி, 35; முகமது அலிஃப் ஹகிமி அப்துல் ஹமீத், 22; முகமது இஸத் ரோம்லி, 25; மற்றும் நார் ஹசிடா மமாத், 38 — ஆகியோர் மாஜிஸ்திரேட் வான் அஷ்ருல் அஃபம் முகமது அஸ்மி முன்னிலையில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றச்சாட்டின்படி, அவர்கள் ஒரு பொதுவான நோக்கத்திற்காக வன்முறையைப் பயன்படுத்திய சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர் களாக இருந்ததன் மூலம், கலவரம் என்ற குற்றத்தைச் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம், மே 24 அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் பெரங்கனில் உள்ள SKMS ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 147-இன் கீழ், அதே சட்டத்தின் பிரிவு 34-உடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டது. இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.
துணை அரசு வழக்கறிஞர் மஹ்ஃபுஸா ஹமிஸா முகமது ஆரிஃப் இந்த வழக்கை நடத்தினார், அதே நேரத்தில் வழக்கறிஞர் ஷம்சுல் பஹாரின் அப்துல்லா குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கும் வாதாடினார்.
ஒரு பாடமாக அமையும் வகையில் பொருத்தமான தண்டனையை விதிக்குமாறு மஹ்ஃபுஸா ஹமிஸா நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
தண்டனைக் குறைப்புக்காக, ஷம்சுல் பஹாரின், தனது கட்சிக்காரர்கள் நிலையான வருமானம் இல்லாத சுயதொழில் செய்பவர்கள் என்றும், வருத்தம் தெரிவித்ததோடு, விசாரணை முழுவதும் ஒத்துழைத்ததாகவும் கூறி, கடுமை குறைந்த தண்டனை கோரினார்.




