அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கையெழுத்தாகும் என்று அமெரிக்கா, பாகிஸ்தான் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால், அவ்வளவு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக சாத்தியமில்லை என ஈரான் கைவிரித்துள்ளது.இந்நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக அந்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சனிக்கிழமை அன்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானுடனான முக்கிய ஒப்பந்தம் தனது 80வது பிறந்தநாளான ஞாயிற்றுக் கிழமை கையெழுத்தாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃபும் இந்த ஒப்பந்தம் மின்னிலக்க முறையில் கையெழுத்தாவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் கூறியிருந்தார்.
அதன் பிறகே, அடுத்த வாரம் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சு வார்த்தைகள் தொடரும் என்றார் அவர்.
ஆனால், டிரம்ப்பின் பதிவிற்கு முன்பாகப் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளரான இஸ்மாயில் பாகேய், ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாக வாய்ப்பில்லை என்றும் வரும் நாள்களில் அதற்கு வாய்ப்புள்ளது என்றும் அரசாங்க ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஹோர்முஸ் நீரிணை உடனடியாக திறந்துவிடப்படும் என்று அதிபர் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பதிவில் கூறியுள்ளார்.
இந்த இழுபறிக்கு மத்தியில் ஒப்பந்தத்தை எப்படியாவது இறுதி செய்யும் நோக்கத்தில் கத்தார் நாட்டு சமரசப் பேச்சாளர்கள் ஞாயிறு காலை அவசரமாக டெஹ்ரானுக்குப் புறப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
முன்னதாக, ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்த தகவலில் “ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஈரானால் முடக்கப்பட்ட உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணை உடனடியாக அனைவருக்கும் திறந்துவிடப்படும்,” என்று அதிபர் டிரம்ப் உறுதியளித்திருந்தார்




