பொதுமக்களுக்கு மோசடி இணைப்பு களைக் கொண்ட குறுஞ்செய்திகளை (SMS) அனுப்ப, போலியான ‘பேஸ் டிரான்ஸ்ஸீவர் ஸ்டேஷன்’ (BTS) சாதனத்தைப் பயன்படுத்திய ஒரு கும்பலை மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) முறியடித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜோகூர் பாருவில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது, தொலைத்தொடர்பு சேவை வழங்குநரைப் போல நடித்து, மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பும் ரேடியோ சிக்னல்களை வெளியிடும் போலியான BTS சாதனத்துடன் கூடிய வாகனத்தை ஓட்டிச் சென்ற 32 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் பிடிபட்டதாக MCMC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
இவ்வழக்கு, 1998-ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 239(1)(a) மற்றும் 2000-ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக (தொழில்நுட்பத் தரநிலைகள்) விதிமுறைகளின் விதி 16(1)(b) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பிரிவு 239-இன் கீழ் அதிகபட்சமாக RM1 மில்லியன் அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப் படலாம்; அதேவேளையில், விதி 16-இன் கீழ் அதிகபட்சமாக RM300,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.
போலியான BTS என்பது மொபைல் நெட்வொர்க் சிக்னல்களைப் போலச் செயல்படும், விதிமுறைகளுக்கு இணங்காத ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும். இது தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் அதிகாரப்பூர்வ நெட்வொர்க் வழியாகச் செல்லாமலேயே பயனர்களின் மொபைல் போன்களுக்கு நேரடியாகக் குறுஞ்செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது; இதனால் மோசடி அல்லது போலியான செய்திகள் உண்மையானவை போலத் தோன்றுகின் றன.
“மோசடி குறுஞ்செய்திகளின் பரவலை அதிகப்படுத்துவதற்காக, மக்கள் அதிகம் கூடும் இடங்களை (hotspots), குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில், இந்தக் கும்பல் குறி வைப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.




