RM156,336 மதிப்புள்ள 32 இலஞ்சப் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஒரு அரசு ஊழியர் இன்று இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் தனது குற்றத்தை மறுத்து வாதிட்டார். கெமாமன் நகராட்சி மன்றத்தின் கட்டிடக் கட்டுப்பாட்டுத் துறையின் முன்னாள் இயக்குநரான 49 வயதான மனேன் மாட் ஹரூன், தன்னுடன் அலுவல் ரீதியான தொடர்புகள் இருப்பதாக அறியப்பட்ட ஒரு நபரிடமிருந்து பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அக்டோபர் 8, 2015 மற்றும் ஜனவரி 10, 2020 ஆகிய தேதிகளுக்கு இடையில், கெமாமனில் உள்ள தாமான் சுகாய் உத்தாமாவில் இருக்கும் ஒரு வங்கியில் அவரது வங்கிக் கணக்கில் அந்தப் பணம் வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகி றது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 165-இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.
துணை அரசு வழக்கறிஞர் ரபியாதுல் அடாவியா நூர்லீ, RM50,000 பிணைத்தொகையை முன்மொழிந்தார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் தனது கடப்பிதழைய ஒப்படைக்க வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை மாதத்திற்கு ஒருமுறை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (MACC) அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞர் ஷாஹிர் மாட் ஜூசோ, தனது கட்சிக்காரர் ஊழல் தடுப்பு ஆணையத்துடன் (MACC) ஒத்துழைக்கத் தயாராக இருப்பதையும், அவரது மனைவி மற்றும் பள்ளி செல்லும் பிள்ளைகளைப் பராமரிப்பது உள்ளிட்ட குடும்பப் பொறுப்புகளையும் காரணம் காட்டி, குறைந்த பிணைத்தொகையைக் கோரினார்.
நீதிபதி நஸ்லிசா நஸ்ரி, அரசுத் தரப்பு கோரிய கூடுதல் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு ஜாமீனுடன் RM36,000 பிணைத்தொகையை அனுமதித்து, வழக்கு விசாரணைக்காக ஜூலை 19-ஆம் தேதியை நிர்ணயித்தார்.




