போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை RM500-ஆக உயர்த்தும் தனது அமைச்சின் முடிவை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று நியாயப்படுத்தினார்.
குறைந்த வருமானம் கொண்ட சாலைப் பயனாளிகளை இம்முடிவு விகிதாச்சாரத்திற்கு மீறிப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவர் இவ்வாறு கூறினார்.
விதிமுறைகளைப் பின்பற்றாமை மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளுக்கு மத்தியில் கடுமையான அபராதங்களை விதிக்கப்போவதாக லோக் உறுதியளித்திருந்த நிலையில், திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சாலைப் போக்குவரத்துச் சட்டத் திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த அபராத உயர்வு முன்மொழியப்பட்டது.
குறைவான தீவிரத்தன்மை கொண்ட குற்றங்களையும் தீவிரமான விதிமீறல்களையும் ஒரே மாதிரியாகக் கருதி அபராதம் விதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டுகளை மறுத்த லோக், ஒவ்வொரு வழக்கின் தன்மையைப் பொறுத்து அதிகாரிகள் குறைந்த அபராதத்தையும் விதிக்க முடியும் என்று விளக்கினார்.
“அனைத்து குற்றங்களுக்கும் RM500 அபராதம் விதிக்கப்படாது. போக்குவரத்து விதிமீறலின் வகை, தீவிரத்தன்மை, பணம் செலுத்தும் காலம் மற்றும் அமலாக்கக் கொள்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விகிதமே இதுவாகும்,” என்று திருத்த மசோதா மீதான விவாதத்தின் இரண்டாம் வாசிப்பை நிறைவு செய்யும்போது அமைச்சர் கூறினார்.
“விரைவாக அபராதம் செலுத்தினால் குறைவான தொகையே செலுத்த வேண்டியிருக்கும் என்ற கொள்கை இப்போதும் நடைமுறையில் உள்ளது. எனவே, RM500 என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் கட்டாயத் தொகை அல்ல.” என்றார் லோக்.




