ஜொகூரில் வீட்டுவசதி மேம்பாடு மற்றும் சமூக நலனுக்காக RM216.44 மில்லியன் நிதியை ஒதுக்குவதாக வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் வெளியிட்ட அறிவிப்பின் நேரம் குறித்து ‘மூடா’ கட்சியின் தலைவர் அமிரா ஆயிஷா அப்துல் அஜீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் காலங்களில் அரசாங்கம் “தேர்தல் சலுகைகளை” (election goodies) வழங்கும் வழக்கத்தை விமர்சித்த அவர், உண்மையான கொள்கை அறிவிப்புகளுக்கும், அரசியல் நோக்கத்துடன் வழங்கப்படும் “இனிப்புகளுக்கும்” இடையிலான வித்தியாசத்தை வாக்காளர்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்று கூறினார்.
“நான் வளர்ச்சிக்கு எதிரானவள் அல்ல. ஆனால், மாநிலத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஏன் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன என்பதே இங்குள்ள கேள்வி,” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“‘பங்சா ஜொகூர்’ (Bangsa Johor) மக்களுக்கு வழங்க அமைச்சர் வீச முற்படும் ‘தேர்தல் இனிப்புகள்’ இவைதானா? எங்கள் மக்கள் முட்டாள்கள் என்று நினைக்காதீர்கள்.”
கோலா குபு பாரு மற்றும் சுங்கை பாகாப் ஆகிய இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின்போதும் இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டதற்காக அமிரா, அமைச்சர் ங்காவை விமர்சித்தார்.
வீட்டுவசதி மேம்பாடு, பொது வசதிகள் மற்றும் சமூக நலனை மேம்படுத்துவ தற்காக, 13-வது மலேசியத் திட்டத்தின் கீழ் ஜோகூருக்கு RM216.44 மில்லியன் நிதியைத் தனது அமைச்சு ஒதுக்கியுள்ளதாக ங்கா நேற்று தெரிவித்தார்.




