குலாய்: ஜூன் 25 அன்று இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு தம்பதியினரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட 3.59 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காலை 10.50 மணிக்கு நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், 40 வயதுடைய உள்ளூர் ஆண் ஒருவரும், 34 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அப் ரஹமான் அர்சாட் தெரிவித்தார்.
“சுமார் 21,766 கிராம் எடையுள்ள மெத்திலீன்-டைஆக்சி-மெத்தாம்பேட்டமைன் (MDMA) தூள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 16 பிளாஸ்டிக் பொட்டலங்கள்; 1,888 கிராம் எக்ஸ்டசி (ecstasy) தூள் கொண்ட 44 பிளாஸ்டிக் பொட்டலங்கள்; 1,621 எக்ஸ்டசி மாத்திரைகள் (570 கிராம்); 6,400 எரிமின் 5 (Erimin 5) மாத்திரைகள் மற்றும் மூன்று பொட்டலம் கெட்டமைன் (ketamine) ஆகியவை கைப்பற்றப்பட்டன.
“கைப்பற்றப்பட்டபோதைப்பொருட்களின் மொத்த எடை 26.94 கிலோகிராம் ஆகும்; இதன் சந்தை மதிப்பு சுமார் 3.59 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களை சுமார் 90,277 பேர் பயன்படுத்தக்கூடும்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டார்.




