சிலாங்கூர், ஜொகூர், மலாக்கா மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த ‘பாண்டட்’ (bonded) வகை லாரிகளைத் திருடும் கும்பல் ஒன்றில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஏழு பேரை, அக்கும்பலின் சூத்திரதாரி உட்பட, கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர்.
ஜூன் 22 முதல் 28 வரை நடைபெற்ற ‘ஆப் லேஜாங் லோரி பாண்டட்’ (Op Lejang Lori Bonded) நடவடிக்கையின் போது, பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் உள்ள பல்வேறு இடங்களில் 32 முதல் 48 வயதுக்குட்பட்ட ஆண்கள் அடங்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
“கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்கு உதவும் வகையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். திருடர்கள், சட்டவிரோத சேமிப்பு கிடங்கு நடத்துநர்கள், மெக்கானிக்குகள், கடத்தல்காரர்கள் மற்றும் திருடப்பட்ட லாரி பாகங்களை வாங்குபவர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் இடைத்தரகராகச் செயல்பட்ட ஒருவரே இக்கும்பலின் சூத்திரதாரி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
ஜொகூர், மலாக்கா, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் சுமார் 18 ‘பாண்டட்’ லாரி திருட்டுச் சம்பவங் களில் இக்கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இதன் மூலம் ஏற்பட்ட இழப்பு சுமார் 1,230,000 ரிங்கிட் என்றும் குமார் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் போது, திருட்டு க்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஐந்து லாரிகள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு கருவிகளை போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.
“இக்கும்பலின் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பல்வேறு நிறுவன ஆவணங்கள் மற்றும் கட்டண ரசீதுகளும் பறிமுதல் செய்யப் பட்டன; பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 400,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டு உள்ளது,” என்று அவர் கூறினார்




