ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவம் அந்நாட்டின் மீது மீண்டும் தாக்குதலைதொடங்கியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஈரான் மற்றும் ஓமனை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட வணிகக் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் உள்ளது.’அறிவிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே வணிகக் கப்பல்கள் செல்லலாம்’ என, ஈரான் கூறியுள்ளது.
இதை மீறும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓமனை ஒட்டியுள்ள பகுதியில், நேற்று மட்டும் மூன்று சரக்குக் கப்பல்கள் தாக்கப்பட்டன. ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதை பிரிட்டன் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்து உள்ளது.இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவம் அந்நாட்டின் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. வணிகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் பெரும் இழப்புகளை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறி, அமெரிக்க மத்திய படை தலைமையகம் தெரிவித்தது.
ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்ற மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீறலாகும் எனவும் தெரிவித்துள்ளது.




