Vimarsagan Media

Home » Malaysia » செந்தூல் (Sentul) பகுதியில் உள்ள ‘ஜாலான் தாமான் டத்தோ செனு’ எனும் தனியார் சாலை மூடப்பட்டது

செந்தூல் (Sentul) பகுதியில் உள்ள ‘ஜாலான் தாமான் டத்தோ செனு’ எனும் தனியார் சாலை மூடப்பட்டது

செந்தூல் (Sentul) பகுதியில் உள்ள ‘ஜாலான் தாமான் டத்தோ செனு’ எனும் தனியார் சாலை மூடப்பட்டது குறித்த கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து, கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் (DBKL) அந்த நிலத்தைக் கையகப் படுத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்தி வருகிறது.

‘ஜாலான் செந்தூல் பகுதியிலிருந்து ‘ஜாலான் தாமான் டத்தோ செனு’ பகுதிக்குச் செல்லும் 30 ஆண்டுகாலப் பயன்பாட்டில் இருந்த இந்தச் சாலை மூடப்பட்டதையடுத்து, சமூக ஊடகப் பயனர்கள் இது குறித்து கவலை தெரிவித்ததாக கோலாலம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ ஃபட்லுன் மக் உஜுட் தெரிவித்தார்.

நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கி விட்டதாகவும், இதற்கான ஒப்புதல் கோரி நிலம் மற்றும் சுரங்கத் துறை தலைமை இயக்குநரிடம் விண்ணப்பம் சமர்ப் பிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “ஒப்புதல் கிடைத்ததும், அந்த நிலம் குறித்த அறிவிப்பு அரசிதழில் (gazette) வெளியிடப்பட்டு, நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்படும்.

“இந்தச் செயல்முறை மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் நிறைவடையும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார். நேற்று ‘ஓடியான் கோலாலம்பூர்’ (Odeon Kuala Lumpur) வளாகத்தில் நடைபெற்ற ‘டவுன்டவுன் கோலாலம்பூர் மானியத் திட்டம் 2026’ 2026) அறிமுக விழாவில் பிரதமர் துறையின் (கூட்டாட்சிப் பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா யோ முன்னிலையில் அவர் இவ்வாறு பேசினார்.

இருப்பினும், நிலத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யும் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால், வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையில் நில உரிமையாளர் திருப்தி அடைகிறாரா என்பதைப் பொறுத்தே இப்பணிகளின் முன்னேற்றம் அமையும் என்று ஃபட்லுன் எச்சரித்தார்.

Scroll to Top