மலேசிய விமானி ஒருவர் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை எவ்வாறு கடத்த முடிந்தது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் (Loke Siew Fook) விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய மசீச இளைஞர் பிரிவுத் தலைவருக்கு, டிஎபி-யின் துணைத் தலைவர் சியாரெட்ஸான் ஜோஹான் பதிலடி கொடுத்துள்ளார்.
MCA இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் மைக் சோங் வெளியிட்ட அறிக்கை “தரம் தாழ்ந்தது” என்று கூறிய சியாரெட்ஸான், டிஎபி-யின் பொதுச் செயலாளரான லோக் மீது பழி சுமத்துவதற்காகவே அவர் இந்த விவகாரத்தைப் பயன்படுத்த முயன்றதாகக் குறிப்பிட்டார்.
இது ஒரு கடுமையான பாதுகாப்பு மீறல் என்பது நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் லோக் பாதுகாப்புக்கு பொறுப்பா னவர் அல்ல. அவர் எல்லைகளைக் கட்டுப்படுத்துவதில்லை. ஆனால் இந்த மசீச நபர், லோக்கைக் குறை கூறுவ தற்காக இந்தப் பிரச்சினையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
“மசீச இந்தத் தீவிரமான பிரச்சினையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. இது (சோங்கை) மிகவும் தரம் குறைந்தவராகவும் மேலோட்டமானவராகவும் காட்டுகிறது,” என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
கடந்த வாரம், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்தில், சுமார் 25 கிலோ எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் 2.7 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவற்றைக் கடத்தியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக ஒரு மலேசிய விமானி கைது செய்யப்பட்டார்.
ஜகார்த்தாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு, அந்த விமானி KLIA-வில் வழக்கமான பாதுகாப்புச் சோதனைகளை முடித்து விட்டார் என்பதை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை உறுதிப்படுத்தியது.




