தேசிய தினத்தை முன்னிட்டு, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் ‘சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா’ (SARA) திட்டத்தின் கீழ் ஒருமுறை வழங்கப்படும் RM100 உதவித்தொகை கிடைக்கும் என்று பரவி வரும் தகவலை நிதியமைச்சு மறுத்துள்ளது.
அந்தப் பதிவில் உள்ள தகவல் பொய்யானது என்று நிதியமைச்சு தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்ததாக ‘பெர்னாமா’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவை நம்பவோ அல்லது மற்றவர்களுடன் பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
“பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையிலான பொய்யான தகவல்கள் பரவுவதைத் தவிர்க்க, தகவல்களைப் பகிர்வதற்கு முன் நிதியமைச்சின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் சரிபார்க்கப்பட்ட தகவல்களைப் பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.




