மலேசியக் காவல்துறையின் புக்கிட் அமான் தலைமையகம், நாட்டின் நிலவழி, கடற்புற எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.
அதற்காக ஆளில்லா வானூர்திகள், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டைத் தலைமை யகம் விரிவுபடுத்தி வருகிறது. பக்கத்து நாடுகளுடன் உளவுத்தகவல்களைப் பரிமாறிக்கொள்வதையும் அது முடுக்கிவிட்டுள்ளது.
கடத்தலையும் எல்லை தாண்டிய மற்றக் குற்றங்களையும் கட்டுப்படுத்துவது நோக்கம்.எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதே காவல்துறையின் பங்கு என்று புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை இயக்குநர் ஆணையர் முகம்மது யூஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்.
அதேவேளையில் அதிகாரத்துவ எல்லைச்சாவடிகளின் பாதுகாப்பு மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட அமலாக்க அமைப்புகளின்கீழ் வருவதாக அவர் சொன்னார்.
“நிலத்திலும் கடற்புறத்திலும் உள்ள எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுடையது. கடத்தல் என்பது எல்லை தாண்டிய பிரச்சினை. இதற்கு அண்டை நாடுகளில் உள்ள சகாக்களின் அணுக்கமான ஒத்துழைப்பு தேவை,” என்று அவர் செய்தியாளர் களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார்




