மலாய் இனத்தை மையமாகக் கொண்ட கட்சிகள் பலமுறை ஒன்றிணைந்து செயல்பட்டாலும், இறுதியில் பிரிந்து சென்றதை PKR-இன் துணைத் தலைவர் அமிருடின் ஷாரி இன்று கிண்டல் செய்தார்.மலாய் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் ஒன்றும் புதியதல்ல என்றும், 1970-கள் மற்றும் 1990-களில் இத்தகைய ஒத்துழைப்பு ஏற்கனவே நிகழ்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
“அவை இரண்டும் முன்பே ‘திருமணம்’ செய்துகொண்டவைதான். 1970-கள் மற்றும் 1990-களில், அவை ஒப்பந்தங் களைச் செய்து ஒன்றிணைந்து செயல்பட்டன. அவை ‘திருமணம்’ செய்துகொண்டன, பின்னர் ‘விவாகரத்து’ செய்துகொண்டன.
இது மூன்றாவது திருமணம். நிச்சயமாக அவை மீண்டும் விவாகரத்து செய்யாது என்று நம்புகிறேன், ஆனால் அது அவர்கள் கையில் தான் உள்ளது,” என்று மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்ற PKR மாநாட்டின் நிறைவு அமர்வில் அவர் கூறினார்.
அமிருடின் எந்தக் கட்சியையும் நேரடி யாகக் குறிப்பிடவில்லை என்றாலும், முன்பு இணைந்து செயல்பட்டு பின்னர் பிரிந்து சென்ற அம்னோ (Umno) மற்றும் பாஸ் (PAS) கட்சிகளையே அவர் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 1 அன்று நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலின் போது பெரிக்காத்தான் நேஷனல் (Perikatan Nasional) மற்றும் பாரிசான் நேஷனல் (Barisan Nasional) ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட புரிதலைத் தொடர்ந்து, அந்த இரு கட்சிகளும் மீண்டும் ஒத்துழைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழல் சவாலானதாகத் தோன்றினாலும், தனது சீர்திருத்தக் கொள்கையின் வலிமையைக் கொண்டு PKR அவற்றை எதிர்கொள்ள முடியும் என்று அமிருடின் கூறினார்.இனம் அல்லது மதம் பாராமல் அனைவருக்கும் நீதியை உறுதி செய்யும் அரசியலை அக்கட்சி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“இது கடினமாகத் தோன்றினாலும், சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், நம்மால் இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியது போல, ‘நான் ஒரு போராளி’.
“இன்று, அந்த முழக்கத்தை நாமும் எதிரொலிப்போம்: நாமெல்லாம் போராளிகள்,” என்று அவர் கூறினார் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளைப் பலவீனப்படுத்தக்கூடிய இன-அடிப்படையிலான அரசியலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று PKR உறுப்பினர்களை அமிருடின் வலியுறுத்தினார்.




