ஜசெக டிஏபி கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும், ஆனால் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடனான தனது உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் கோலாலம்பூர் பிரதிநிதி சங்கீத் கவுர் டியோ கூறினார்.
இன்று இங்கு நடைபெற்ற டிஏபி-யின் சிறப்பு மாநாட்டில் பேசிய சங்கீத், நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப கால அவகாசம் தேவைப்படுவதால், “தற்போதைக்கு” கட்சி கூட்டாட்சி அரசாங்கத்தில் நீடிக்க வேண்டும் என்று கூறினார்.
“எங்கள் அமைச்சர்கள் மேற்கொண்ட அனைத்து சீர்திருத்தங்களையும் நாம் சுட்டிக்காட்டலாம்; அத்தகைய சீர்திருத்தங்கள் பல உள்ளன. அமைச்சரவை அளவில் முன்னெடுக்கப் பட்ட நடவடிக்கைகள் வலுவாகவே இருந்தன.
“ஆனால், ஒரு கட்சியாக நாம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினைகளை நாம் புறக்கணிக்க முடியாது.அமைதி குலைந்துவிடக்கூடாது என்பதற்காக பல விவகாரங்களில் நாம் மௌனம் காத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
ஆட்சியில் இருந்த காலத்தில் ஊழல் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்திருந் ததை அக்கட்சியால் மறுக்க முடியாது என்றும் சங்கீத் குறிப்பிட்டார்.
“ஊழலை ஒழிப்போம் என்ற அடிப்படையில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்.அதைச் செய்தோமா? இல்லை. (அம்னோ தலைவர்) அஹ்மத் ஜாஹித் ஹமிடி தனது 47 குற்றச்சாட்டு களிலிருந்து ‘குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு ஆனால் முழுமையான விடுதலை அல்ல’ (DNAA) என்ற உத்தரவைப் பெற்றுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) உள்ளிட்ட நமது நிறுவனங்கள் தொடர்பான சர்ச்சைகளையும் நாம் எதிர் கொண்டுள்ளோம்.”
ஒரே கூட்டாட்சி கூட்டணியில் அங்கம் வகித்தாலும், அம்னோ பகிரங்கமாக டிஏபி-யைத் தாக்கி வருவதாக சங்கீத் கூறினார்.
“இவர்கள் நாம் உண்மையாகவே இணைந்து பணியாற்றக்கூடிய கூட்டணி கூட்டாளிகளா? அன்வாருடனான நமது உறவை தீவிரமாக மறுபரிசீலனை செய்யுமாறு நமது மத்திய செயற்குழு வைக் கேட்டுக்கொள்கிறேன்.
“கூட்டணி கூட்டாளிகளை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக அவர் என்ன செய்தார்? அவர் நம்மைப் பிரித்து, ஒருவருக்கு எதிராக மற்றொருவரைத் தூண்டிவிட்டுள்ளார். அவர் அம்னோவை வலுப்படுத்தியுள்ளார். அதை நாம் புறக்கணிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
டிஏபி தனது ஒரு நாள் சிறப்பு மாநாட்டை புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடத்துகிறது; இதில், நாடாளுமன்ற பதவிக்காலத்தின் எஞ்சிய காலத்திற்கு கட்சி கூட்டாட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து 4,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர்.




