முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானுக்குத் தனது திருமணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற பிரம்மாண்டமான கனவுத் திட்டம் எதுவும் இல்லையென்றாலும், பாடகியும் நடிகையுமான பெல்லா அஸ்டில்லாவைத் தனது “கனவுத் துணையாக” அவர் ஏற்கனவே கண்டடைந்துவிட்டார்.
அக்டோபர் 10-ஆம் தேதி பெல்லாவைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் சையத் சாதிக், தனது கனவுத் துணையாகக் கருதும் பெண்ணுடன் தனது அன்பையும் வாழ்க்கையையும் பகிர்ந்துகொள்வதே தனக்கு மிக முக்கியம் என்று கூறினார்.
“எனக்குத் திருமணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற கனவுத் திட்டம் எதுவும் இல்லை; ஆனால், எனக்குக் கனவுத் துணை (மனைவி) கிடைத்துவிட்டார். அதுதான் மிக முக்கியமான விஷயம்,” என்று சையத் சாதிக் கூறியதாக ‘ஆஸ்ட்ரோ அவானி’ (Astro Awani) செய்தி வெளியிட்டுள்ளது.
பெல்லாவுடனான திருமண நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான அவர் ஒப்புக்கொண்டார்.
“உண்மையைச் சொல்லப்போனால், இது பெரிய ரகசியமாக இருந்ததாக நான் நினைக்கவில்லை; ஏனெனில், எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இணைந்துதான் நாங்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.
“ஆனால் இப்போது இந்தச் செய்தி வெளியாகிவிட்டதால், இதுவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்காத நண்பர்களிடமும் இதைப் பகிர்ந்துகொள்வது எங்களுக்கு எளிதாகிவிட்டது.
“எனக்கு இப்போது நிம்மதியாக இருக்கிறது; எங்கள் திருமண நாளுக் காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
மேலும், அதிகப்படியான குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் வகையில் முவார் மற்றும் சபா ஆகிய இடங்களில் கொண்டாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் சையட் சாதிக் தெரிவித்தார்.




