முன்னாள் நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மீது 2021-ல் தொடங்கப்பட்ட விசாரணை, அவர் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாமலேயே நிறைவடைந்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) உறுதிப்படுத்தியுள்ளதாக ‘பெர்னாமா’ செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள், ஆவணங்கள் மற்றும் சான்றுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக MACC தெரிவித்துள்ளது. கோலா லங்காட் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான இவர் தொடர்பான இரண்டு விசாரணை ஆவணங்கள், 2009-ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் பிரிவு 16(a)(A)-ன் கீழ் 2021-ல் தொடங்கப்பட்டிருந்தன.
“தொடர்புடைய உண்மைகள், ஆவணங்கள் மற்றும் சான்றுகள் மீதான விசாரணை மற்றும் ஆய்வுக்குப் பிறகு, சேவியர் மீது குற்றம் சாட்டுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், 2024-ஆம் ஆண்டில் இவ்வழக்கை ‘Kemas Untuk Simpan’ (KUS – அதாவது, மேல் நடவடிக்கை ஏதுமின்றி கோப்பை மூடி வைக்கும் நிலை) என வகைப்படுத்த துணை அரசு வழக்கறிஞர் முடிவு செய்தார்,” என்று அது இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு வழக்கின் சிக்கலான தன்மை மற்றும் தொடர்புடைய தகவல்கள் மற்றும் சான்றுகளைப் பெறுதல், ஆய்வு செய்தல் மற்றும் சரிபார்த்தல் ஆகியவற்றின் தேவையைப் பொறுத்தே விசாரணையின் கால அளவு அமைகிறது என்று ஆணையம் கூறியது.
மேலும், எந்தவொரு தரப்பினரின் தலையீடும் இன்றி, உண்மைகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் விசாரணைகள் தொழில்முறை ரீதியாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படுகின்றன என்பதையும் அது வலியுறுத்தியது.
“அதற்கிணங்க, விசாரணை நிறைவடைந்துவிட்டதால், இவ்விகாரம் குறித்து எந்தவொரு ஊகங்களையோ அல்லது அனுமானங்களையோ செய்ய வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று அது கூறியது.
ஊழல் விசாரணை குறித்த எந்தத் தகவலும் இல்லாதது பொறுப்புக்கூறலில் ஒரு இடைவெளியை உருவாக்கியுள்ளதாகக் கூறி, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் குவா கியா சூங் (Kua Kia Soong) கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.




