Vimarsagan Media

Home » Malaysia » ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 16 ஆகிய தேதிகளில் பிரதமர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்

ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 16 ஆகிய தேதிகளில் பிரதமர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஆகஸ்ட் 30 அன்று தேசிய தினத்திற்கு முந்தைய நாளிலும், செப்டம்பர் 16 அன்று மலேசிய தினக் கொண்டாட்டங்களின் போதும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இருப்பினும், அந்த அறிவிப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை அவர் வழங்கவில்லை. “நான் கருத்துகளைக் கேட்டுப் பரிசீலிப்பேன்; ஆகஸ்ட் 31-க்குள் நாட்டிற்கான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன். பின்னர், மலேசிய தினத்தைக் கொண்டாட செப்டம்பர் 16 அன்று கூச்சிங்கிற்குச் செல்வேன்.

“ஆகவே, ஆகஸ்ட் 31-க்கு முந்தைய நாளில் ஒரு அறிவிப்பும், செப்டம்பர் 16-ல் மற்றொன்றும், அக்டோபர் மாதத் தொடக்கத்தில் வரவு-செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யும்போதும் இன்னொன்றும் என அறிவிப்புகள் இருக்கும்,” என்று இன்று நடைபெற்ற ‘ஹிம்புனான் ஆனாக் முடா அன்டரபங்சா’ (HAMKA) 2026-ன் தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற ‘தேமு அன்வார்’ (Temu Anwar) நிகழ்வில் அவர் கூறினார்.

‘கிக் எகானமி’ (gig economy) எனப்படும் தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையிலான பணிச் சூழலில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் நலன் மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்த மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.

மலேசிய கிக் எகானமி ஆணையத்தை (SEGiM) நிறுவுதல் மற்றும் சிறு வணிகங்கள் தொடர்பான புதிய மசோதாவை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், இத்துறையில் பணிபுரிபவர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்தி வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

தற்போது வழங்கப்படும் உதவிகள் போதுமானதாக இல்லை என்ற கருத்துகள் நிலவினாலும், இக்குழுவினரின் நலனைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

Scroll to Top