அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் தொழிலாளர்களின் திறன்கள், கல்வி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தி, மலேசிய தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் (MTUC) குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு RM3,100-ஆக உயர்த்தக் கோரியுள்ளது.
வீட்டு வசதி, உணவு, போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டால், RM3,100 என்பது ஒரு நியாயமான புதிய குறைந்தபட்ச ஊதியமாக இருக்கும் என்று MTUC பொதுச் செயலாளர் கமரூல் பஹாரின் மன்சோர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
தொழிலாளர்களின் திறன்கள், கல்வி மற்றும் பணி அனுபவத்திற்கு ஏற்ப ஊதிய உயர்வு அமைவதை உறுதிசெய்ய, குறைந்தபட்ச ஊதியக் கட்டமைப்பை நடுத்தர வருமானம் ஈட்டும் தொழிலாளர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
“இது திறன் பொருத்தமின்மை (skills mismatch) சிக்கலைத் தீர்க்கவும், நிறுவனங் கள் தரமான திறமையாளர் களை ஈர்க்கவும், உற்பத்தித்திறன் மற்றும் ஊதிய வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவும்,” என்று அவர் கூறினார்.
அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியத்தை மறுஆய்வு செய்து வருவதாக மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் வெளியிட்ட அறிவிப்பு தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் என்று கமரூல் குறிப்பிட்டார்.
தேசிய ஊதிய ஆலோசனைச் சட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஊதியம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.




