நாட்டின் ஏழு பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகி இருந்தது. – பல பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால் மூச்சுத் திணறல், சுவாசக்குழாய் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
‘ஆஸ்துமா’ சம்பவங்கள் 259 விழுக்காடும் சுவாசக்குழாய் தொற்றுச் சம்பவங்கள் 124 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஸூல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.
சுவாசக்குழாய் தொற்றுகளிலேயே ஆக அதிக எண்ணிக்கையாக 3,674 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 1,637ல் இருந்து அதிகரித்துள்ளது. அதேபோல் ‘ஆஸ்துமா’ சம்பவங்கள் 61ல் இருந்து 219 ஆக உயர்ந்தன.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) காலை 8 மணிவாக்கில் ஏழு பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியிருந்தது.
செரியான் (197), கூச்சிங் (185), ஸ்ரீ அமான் (178), சமரஹான் (176), சரிக்கே (128) சுங்கை பட்டாணி (126), தைப்பிங் (126) ஆகிய பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.
புகைமூட்டம் காரணமாக சுங்கை பட்டாணி, அலோர் ஸ்டாரில் உள்ள பொதுமக்களைத் திறந்தவெளி நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு கெடா மாநிலச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டும் சூழலில் குழந்தைகள், முதியவர்கள், இதய நோய் அல்லது சுவாசப் பிரச்சினை உள்ளவர்களைக் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டது. பொதுமக்கள் திறந்தவெளி உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் போன்ற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.




