அமெரிக்காவில் கடுமையாக்கப்பட்டு வரும் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விசா கட்டுப்பாடுகள் காரணமாக, அந்நாட்டு கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 15 சதவீதம் குறைந்து உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளை வெளிநாட்டில் படிக்க விரும்பினால் அவர்களின் முதல் தேர்வாக இருப்பத அமெரிக்கா. அங்கு தங்கி படிக்கும் சர்வதேச மாணவர்களில், 31 சதவீதம் பேர் இந்தியர்கள். கடந்த, 2024 – -25 கல்வி ஆண்டில் மட்டும், 3.63 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து பயின்று வந.தனர்
அமெரிக்காவிற்கு அதிக மாணவர்களை அனுப்பும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில்இந்தியா உள்ள நிலையில், நடப்பாண்டில் அமெரிக்க கல்லுாரிகளில் சேர இந்திய மாணவர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. அதாவது, 1,100-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘காமன் ஆப்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
அதில், ஒட்டுமொத்த உள்நாட்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்திருந்தாலும், மார்ச் 1 வரையிலான நிலவரப்படி அனைத்துலக மாணவர்களின் விண்ணப்பங்கள், 10 சதவீதம் வரை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் இந்தியாவில் இருந்து வரும் விண்ணப்பங்கள், 15 சதவீதம் குறைந்துள்ளது. இது வரலாற்றிலேயே மிகக் கடுமையான வீழ்ச்சியாகும். குடியேற்றக் கொள்கைகள் மற்றும் கடும் விசா கட்டுப்பாடுகள் காரணமாக, 2025- – 26-ல் 11.69 லட்சமாக இருந்த சேர்க்கை, 2026- – 2027ல் 10.57 லட்சமாக குறையும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 1978 முதல், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்களின் படிப்பு காலம் முடிந்த பின், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் புதிய கொள்கையின்படி, மாணவர்கள், அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர். மேலும் படிப்பை முடித்த பின், வேறு கல்லுாரிக்கு மாற அல்லது நாட்டை விட்டு வெளியேற, 60 நாட்கள் அவகாசம் இருந்தது. அதுவும் 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.




