Vimarsagan Media

Home » World » இஸ்லாமாபாத்தில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து: 14 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்தில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து: 14 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் தில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் தீப்பற்றியதால் 14 பச்சிளங்குழந்தைகள் மாண்டுபோனதாக ‘டான்’ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் இருந்த தாய்-சேய் நலப் பிரிவில் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 7 மணியளவில் தீப்பற்றியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிட்டது.

தகவலறிந்ததும் மீட்புக் குழுக்கள் அம்மருத்துவமனைக்கு விரைந்தன. ஆறு தீயணைப்பு வாகனங்களும் நான்கு அவசர மருத்துவ வாகனங்களும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இஸ்லாமா பாத் நிர்வாகம் ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.

“தீ மேலும் பரவாமல் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டது. அங்கிருந்த குழந்தைகள் உடனடியாகத் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டன. ஆயினும், 14 குழந்தைகள் இறந்து விட்டன,” என்று அவ்வறிக்கை கூறியது.

தீவிபத்து குறித்து விசாரணை நடத்த கூடுதல் உதவி ஆணையர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தீப்பற்றியபோது மகப்பேற்றியல் பிரிவில் 15 பச்சிளங்குழந்தைகள் இருந்தன என்றும் மருத்துவர் ஒருவரால் அவற்றுள் ஒரு குழந்தை காப்பாற்றப் பட்டது என்றும் மருத்துவமனையின் பேச்சாளர் டாக்டர் அனீஸா ஜலீல் கூறினார்.

காலை 6.45 மணியளவில் குளிரூட்டி ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதே தீப்பற்றியதற்குக் காரணம் என்று ஜியோ தொலைக்காட்சியிடம் சுகாதார அமைச்சர் முஸ்தஃபா கமால் தெரிவித்தார். அங்கு உயிர்வாயுக் கலன்கள் இருந்ததால் தீ வேகமாகப் பரவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top