Vimarsagan Media

Home » World » இந்தோனீசியாவில் பரவும் புகைமூட்டம்; மில்லியன்கணக்கானோர் பாதிப்பு

இந்தோனீசியாவில் பரவும் புகைமூட்டம்; மில்லியன்கணக்கானோர் பாதிப்பு

இந்தோனீசியாவில் காட்டுத்தீயால் பரவிவரும் அடர்ந்த புகைமூட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை மூடியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது; பள்ளிகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன; மில்லியன்கணக்கானோர் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரியாவ் மாநிலத்தில் புகைமூட்டம் காரணமாக அண்மைக்காலமாகப் பார்வைத் தொலைவு 500 மீட்டராகக் குறைந்துள்ளது. பிஎம்2.5 தூசு அளவு 235.7 மைக்ரோகிராமாக உயர்ந்துள்ளது. இது, உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த 24 மணிநேர வரம்பான 15 மைக்ரோகிராமைவிட கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகம்.

ரியாவ் மாநிலத் தலைநகர் பெக்கான்பாருவில் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) புகைமூட்டம் மிகக் கடுமையாக இருந்ததாகக் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். புகைநெடியால் பலருக்கும் தலைச்சுற்றலும் கண் எரிச்சலும் ஏற்பட்டன.

மோட்டார்சைக்கிளில் செல்லும்போது மக்கள் முகக்கவசம் மட்டுமன்றி, தலைக்கவசத்தின் கண்ணாடியையும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்தியானிங்ரம் என்ற பெண் கூறினார்.

பெலாலாவான் உள்ளிட்ட சில பகுதிகளில் பள்ளி வகுப்புகள் இணையவழிக்கு மாற்றப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 110,000 முகக்கவசங்களை மாநில அரசு வழங்கியுள்ளது. மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உதவிகளும் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் பெருங்கூட்டம் ரியாவ் மாநிலத் தில் 2026ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து 237,835 சுவாச நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு 16,264 ஹெக்டர் நிலப்பரப்பு தீக்கிரையாகிவிட்டது. அதில் 92 விழுக்காடு சதுப்புநிலப்பகுதியாகும்.

தெற்கு சுமத்ராவின் பாலெம்பாங் நகரில் காற்று மாசுபாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான நிலையை எட்டியது. 20 மீட்டருக்கு அப்பால் இருந்தவை கண்ணுக்குத் தெரியாத அளவிற்குக் கடுமையான புகைமூட்டம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கச் செய்துள்ளனர்.

Scroll to Top