புடு பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே நடந்த, சமூக ஊடகங்களில் வைரலான ஒரு பெரிய மோதல் சம்பவம் தொடர்பாக, 19 முதல் 30 வயதுக்குட்பட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முகநூலில் வெளியான 38 வினாடி காணொளியில், ஒரு கும்பல் மோதலில் ஈடுபடுவதும் கலவரம் செய்வதும் பதிவாகியிருந்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக வாங்சா மாஜு காவல் நிலையத் தலைவர் அன்னாஸ் சுலைமான் தெரிவித்தார்.
‘எஸ்பெரன்ஸ் புடு’ (Esperance Pudu) என்ற இடத்திற்கு வெளியே இச்சம்பவம் நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது; பல தனிநபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றிப் பெரிய மோதலாக மாறியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன என்று அவர் கூறினார்.
“கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவருக்கும் வன்முறை மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான முந்தைய குற்றப் பின்னணி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“விசாரணைக்கு உதவும் வகையில், சந்தேக நபர்கள் அனைவரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை ஐந்து நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.”
இச்சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கருப்பு நிற ‘பெரோடுவா மைவி’ (Perodua Myvi) காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்; அதேவேளையில், இதில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்களைத் தேடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வழக்கு, கொலை முயற்சி தொடர்பான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307, ஆயுதம் அல்லது ஆபத்தான பொருளை ஏந்தி கலவரத்தில் ஈடுபட்டதற்கான பிரிவு 148 மற்றும் சேதம் விளைவித்ததற்கான பிரிவு 427 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.




