இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சோகார்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில், மலேசிய ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் போதைப்பொருட்களைக் கடத்த முயன்று தோல்வியடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு மலேசிய ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 11 முதல் 15 வரை புக்கிட் அமான் (Bukit Aman) அதிகாரிகளின் குழுவால் விசாரிக்கப்பட்ட 39 வயதான அந்த விமானியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ‘பெரிதா ஹாரியன்’செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த விமானி கையாண்ட போதைப் பொருட்களை விநியோகித்தவர் களாகவும், அவற்றை உரிய இடத்திற்குக் கொண்டு சேர்த்தவர்களாகவும் இவர்கள் செயல்பட்டதாகக் கருதப்படுகிறது என்று மத்திய போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் ஹுசைன் உமர் கான் கூறினார்
ஜூலை 29 அன்று விமானி கைது செய்யப்பட்ட பிறகு, அவர்களில் நால்வர் தாய்லாந்து மற்றும் வியட்நாமிற்குத் தப்பிச் சென்றனர். தாய்லாந்திற்குத் தப்பிச் சென்ற இருவர், லங்காவி வழியாகப் படகு மூலம் மலேசியாவிற்குத் திரும்பும்போது கைது செய்யப்பட்டனர்.
மற்ற இருவரும் வியட்நாமிலிருந்து பினாங்கு சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்திறங்கியபோது கைது செய்யப் பட்டனர். நாட்டை விட்டு வெளியேறாத மற்ற இருவர், பினாங்கின் புக்கிட் மெர்டாஜம் மற்றும் சிலாங்கூரின் கிள்ளான் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டனர்.
“23 முதல் 50 வயதுக்குட்பட்ட இந்தச் சந்தேக நபர்கள், ஆகஸ்ட் 20 முதல் 28 வரை நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர். அந்த விமானி தொடர்புடைய போதைப்பொருள் விநியோகக் கும்பலில் இவர்கள் மேல்நிலை மற்றும் கீழ்நிலை (upline and downline) பணிகளை மேற்கொண்டி ருந்ததை எங்கள் விசாரணை கண்டறிந்துள்ளது.
“விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” “அவர்கள் அனைவரும் 1985 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் (சிறப்புத் தடுப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்,” என்று ஹுசைன் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது




